Monday, April 20, 2009

540. ஒரு விபத்து ஒரு மரணம் ஒரு பேரிழப்பு

இது குறித்து எழுத வேண்டுமா என்று பலமுறை யோசித்துத் தான், இதை எழுதுகிறேன்! காரணம் உள்ளது. பின்னால் சொல்கிறேன்.

"சென்னை ஏப்ரல் 17: நேற்று இரவு 11 மணியளவில் தி.நகரில்,ஒரு சாலை விபத்தில், ஐடி கம்பெனி ஒன்றில் பணி புரிந்து வந்த 27 வயது வாலிபர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்" -- இது போல தினம் 4 அல்லது 5 மரணச்செய்திகளை நாளிதழ்களில் வாசிக்கிறோம். செய்திகளை கடந்து விடுகிறோம், மறந்து விடுகிறோம். வாழ்க்கையின் ஓட்டம் அப்படியானது..

ஆனால், மேற்கூறிய செய்திக்கும் எனக்கும் சம்பந்தம் உள்ளது. (அந்த துக்கச்செய்தி என்னைத் தான் முதலில் வந்தடைந்தது. அடுத்த 15 நிமிடங்கள் தான் நான் வாழ்வில் அனுபவித்த மிக மிக மோசமான தருணங்கள்!) அந்த விபத்தில் இறந்த வாலிபர், 27 வயதான என் மருமகன் (அக்கா மகன்); தி.நகரில் கட்டப்பட்டுள்ள புதுப் பாலத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலைப் பக்கம் (பைக்கில் பயணித்து) இறங்கும்போது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக மீடியனைத் தட்டி, வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டு, பின்னந்தலையில் அடிபட்டு, ஸ்பாட்டிலேயே இறந்து போனான்.

எனக்குப் பிறந்தது இரண்டுமே பெண்கள் என்பதால், நானும் என் மனைவியும் அவனை மகன் போலவே பாவித்தோம். அவனும் மகன் போல் தான் நடந்து கொண்டான். மிக நல்லவன். சூதுவாது அறியாதவன், அதிர்ந்து பேசமாட்டான். கடும் உழைப்பாளி.

"எதற்குப் பிறந்தான்? எதற்குப் படித்தான்? ஏன் இத்தனை நல்லவனாக இருந்தான்? எதற்கு பிரதிபலன் எதிர்பாராமல் எல்லார்க்கும் ஓடியோடி உதவி செய்தான்? அவனைக் காப்பாற்ற ஒரு வாய்ப்பு எங்களுக்கு வழங்காமல் (முக்கியமாக அவனிடம் சதாசர்வ காலமும் உதவி பெற்றுக் கொண்ட எனக்கு, அவனுக்கு உதவ ஒரு வாய்ப்பு தராமலேயே!) ஒரு கணத்தில் உயிரை விட்டு, எதற்காக ரோடு ஓரத்தில் ஒரு முக்கால் மணி நேரம் அனாதையாகக் கிடந்தான்?" - இப்படி எத்தனையோ மனதை அரிக்கும் கேள்விகள், எதற்கும் பதில் கிடையாது :-(

சிறு வயதிலிருந்தே, பல பொழுதுகளை எங்கள் வீட்டில் கழித்தவன் அவன். "ஆனந்தா இதைப் பண்ணு, ஆனந்தா அதைப் பண்ணு, ஆனந்தா அதை வாங்கிட்டு வந்தியா, ஆனந்தா அதைக் கொடுத்தாச்சா" என்று இனிமேல் ஆனந்தநாம சங்கீர்த்தனம் பண்ண முடியாது! அவன் செத்துப் போனது என் ஸிஸ்டத்தில் இன்னும் சரியாக பதிவாகவில்லை. "மாமா" என்று கூப்பிட்டவாறே, எப்போதும் போல் ஒரு சனிக்கிழமை மதியம் ஆபிசிலிருந்து என் முன் வந்து நிற்பான் என்ற பிரமை என்னை சூழ்ந்திருக்கிறது!

அகாலத்தில் ஒருவர் இறப்பது என்பது அவருக்கான தண்டனையே அல்ல. அந்த தண்டனை அவரைச் சார்ந்தவர்களுக்கானது. எண்ணி எண்ணி மருகும்படியான துக்கம் அது, சில சோகங்கள் வாழ்வின் எல்லை வரை நம்மை விடாது துரத்தும் :-( நிச்சயம் அது போன்ற ஒன்று தான் இது, என்னளவில். இப்படிச் சொல்ல காரணம் இருக்கிறது. ஆனந்த் எனக்காகச் செய்த காரியங்கள் எல்லாவற்றையும் என்னாலேயே செய்து விட முடியும் என்றாலும், அந்தச் செயல்களை நானே செய்யும் சமயங்களில், அவன் ஞாபகம் வருவதை இனி தவிர்க்கவே முடியாது...

2 வருடங்களே பணி புரிந்த கம்பெனியிலிருந்து இறுதி மரியாதை செலுத்த 500 பேர் வந்திருந்தது பார்த்து பெருஞ்சோகத்திலும், பிரமிப்பு ஏற்பட்டது. இன்னும் எத்தனையோ நண்பர்கள் சாவுக்கு...

மிக நல்லவனாக இருந்தால், கடவுள் சீக்கிரம் அழைத்துக் கொண்டு விடுவான் போல் இருக்கிறது! என் வலது கை போல் இருந்தவன், பெருமாள் அந்தக் கையை உடைத்துப் போட்டு விட்டார்!

இந்தப் பதிவுக்கான காரணம்: ஆனந்த் விபத்து நிகழ்ந்தபோது, ஹெல்மட் அணிந்திருந்தான். ஆனால், ஹெல்மட் ஸ்ட்ராப்பின் (strap) பக்கிளை (buckle) போடாததால், ஹெல்மட் கழண்டு விட்டதாக விபத்தை நேரில் பார்த்த ஒரு கடைக்காரர் கூறினார்.

ஆகவே, பைக்கில் செல்பவர் ஹெல்மட் போட்டால் மட்டும் போதாது. ஹெல்மட் strap buckle ஐயும் சரியாக போட்டுக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இவ்விடுகையை வாசிக்கும் (டூ வீலரில் பயணிக்கும்) நண்பர்களுக்கு இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.

நேற்று அயன் திரைப்படம் பார்க்க எனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணியிருந்தான்! இனி அயன் படம் எப்போதும் பார்க்க முடியாது செய்து விட்டான் :-(

64 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test :-(

வெயிலான் said...

மிக வருத்தமடைய வைக்கும் செய்தி!

Jayaprakash Sampath said...

ஆழ்ந்த அனுதாபங்கள். விபத்தில் நெருங்கிய உறவினர்களை இழப்பதன் வலியை உணர்ந்திருக்கிறேன். நீங்கள் வணங்கும் பெருமாள் உங்களுக்கும்,உங்கள் குடும்பத்திருக்கும், துக்கத்தில் இருந்து மீள்வதற்கான மனவலிமையைத் தரட்டும்.

Sridhar Narayanan said...

மிகவும் வருத்தமான நிகழ்ச்சி. :(

//அகாலத்தில் ஒருவர் இறப்பது என்பது அவருக்கான தண்டனையே அல்ல. அந்த தண்டனை அவரைச் சார்ந்தவர்களுக்கானது. எண்ணி எண்ணி மருகும்படியான துக்கம் அது,//

சத்தியம். இந்த இழப்பிலிருந்து நீங்களும், உங்கள் தமக்கை குடும்பத்தாரும் மீண்டு வர எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

பாலா

என்ன சொன்னாலும் வெறும் வார்த்தையாய்தான் இருக்கும். இது போன்ற தவிர்க்க முடிந்த இழப்புகள் நேர்வது துரதிர்ஷ்டம்.

இதனையும் தாங்கும் வலிமையை ஆண்டவன் உங்களுக்குத் தர வேண்டிக்கொள்கிறேன்.

தருமி said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை.

யாத்ரீகன் said...

am very sorry for it :-( , no words could replace the sorrow

Jayakumar said...

அன்புள்ள பாலா,

மிகவும் வருத்தமாக இருக்கிறது. இங்கே எதுவுமே நியாயம் இல்லை. மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ஜேகே

Santhosh said...

பாலா,
என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள், எனக்கு கூட நிறைய பேர் அந்த buckle போடணுமுன்னு சொல்லி இருக்காங்க.. நான் கூட பல நேரம் அதை சரியா பின்பற்ற மாட்டேன்.. என்ன ஆயிடப்போவுதுன்னு ஒரு அஜாக்கிரதை தான்..

ஆயில்யன் said...

//அகாலத்தில் ஒருவர் இறப்பது என்பது அவருக்கான தண்டனையே அல்ல. அந்த தண்டனை அவரைச் சார்ந்தவர்களுக்கானது. எண்ணி எண்ணி மருகும்படியான துக்கம் அது, சில சோகங்கள் வாழ்வின் எல்லை வரை நம்மை விடாது துரத்தும்//

உண்மை !

நெருங்கி பழகிய உறவினை பிரிந்துவாடும் நிலையில் ஆறுதல் கூற வார்த்தைகளின்றி

ஆன்மா நிம்மதியடைய பிரார்த்திக்கின்றேன்!

:((

-/பெயரிலி. said...

இறப்புகள் நமக்குப் பழகிப்போய்விட்டபோதுங்கூட, அறிந்தவொருவரின் உறவினர் எனும்போது துணுக்குறுகிறேன்.

காலம் உங்கள் சோகத்தினை ஆற்றட்டும்.

PRABHU RAJADURAI said...

தங்களது வருத்தத்தில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்...இழப்பின் சோகம் புரிந்தவன் என்ற உரிமையில்...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

said...

My heartfelt sympathies to you and family. May God give you all the courage to go on.
I sincerely pray for your peace.
I can understand how painful it is. I lost my younger brother sometime ago when he was only 22.
All two wheeler riders should make it a point to wear good quality, authentic helmets in the proper way. With the kind of chaotic traffic we have, no one should take the habit of wearing a helmet lightly.

goma said...

எந்த பருவத்தில் இறந்தாலும் இறந்தோர் புண்ணிய ஆத்மாக்கள்.சாலை விபத்தில் உயிர் இழப்பின் சோகத்தை அனுபவித்த துடிப்போடு சொல்கிறேன் ,காலம்தான் ஆறுதல் சொல்லும் என்பது கூட பொய்தான் .
அந்த நல்ல ஆத்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.

கல்வெட்டு said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

:-(((

Naga Chokkanathan said...

படிக்கும்போதே ரொம்பக் கஷ்டமா இருந்தது சீனியர். நிஜத்தில உணர்ந்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு புரியுது. இதைத் தாங்கும் வல்லமையைக் கடவுள் உங்களுக்கு வழங்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

’ஹெல்மெட் படா பேஜார், அவஸ்தை’ன்னு எத்தனையோ வாட்டி சொல்லியிருக்கேன், ‘என் பாதுகாப்பைப்பத்தி அரசாங்கத்துக்கு என்ன அக்கறை?’ன்னு விதண்டாவதாம் பேசியிருக்கேன், அது சட்டமானபிறகு, ஹெல்மெட்க்கு பயந்து 2 வீலர் ஓட்டுவதையே நிறுத்திவிட்டேன். இந்தப் பதிவுக்கப்புறம் அப்போ எனக்கு அறிவுரை சொன்னவங்களோட மனசு, அக்கறை புரியுது.

- என். சொக்கன்,
பெங்களூர்.

அரவிந்தன் said...

கடந்த ஒரு மாதமாக பெங்களுரில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்கிறேன்.

உங்கள் பதிவினை அன்று டிவிட்டரில் பார்த்தபின்பு ஹெல்மெட் strap buckle விஷயத்தில் எவ்வளவு அலட்சியமாக இருந்திருக்கிறேன் என்று புரிந்தது.

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்

-/சுடலை மாடன்/- said...

வாசிக்கும் பொழுதே மிகத் துயரமாக இருந்தது.

இந்த இழப்பிலிருந்து மீள்வதற்கு உங்கள் குடும்பத்தினருக்கு மனவலிமை கிட்டட்டும்.

மாயவரத்தான் said...

:(

ஆழ்ந்த அனுதாபங்கள்

ரவி said...

mdp. rip.

puduvaisiva said...

மிக வருத்தமடைய வைக்கும் செய்தி!

ஆன்மா நிம்மதியடைய பிரார்த்திக்கின்றேன்!

சின்னப் பையன் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

:-(

said...

Balaji,

My heartfelt condolences on the untimely demise of your nephew. I was very saddened to read the note.

It is important that you be the source of courage for your sister and other members of the family. We will never understand why fate intervenes the way it does in our lives.

We will pray so that God will give you all the strength to get through this difficult time.

Sriram

enRenRum-anbudan.BALA said...

அன்பான நண்பர்களுக்கு,

மிக நிச்சயமாக, உங்கள் வார்த்தைகள் எனக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கின்றன. நன்றி, உங்கள் அனைவருக்கும்.

எனக்குத் தெரிகிறது, காலம் இந்த பெருந்துக்கத்தை மெல்ல மெல்ல குறைக்க வல்லது என்று.

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

Arivazhagan,
//
I can understand how painful it is. I lost my younger brother sometime ago when he was only 22.
//
What can I say ? Thanks for sharing my grief. May God give you the strength and means to come out of this great loss !

Kavi said...

உண்மைதான் இறந்தவர் போய்விடுவார்.. அவருடன் பழகியவர்கள் படும் துயரம்தான் மிகவும் கொடியது! உங்கள் துயரத்தை புரிந்த கொள்ள முடிகிறது.

இந்த துன்பத்தில் இருந்து மீண்டு எழுவது சிரமம்தான் என்றாலும் காலம் உங்கள் மனத்தின் வலியை ஆற்றும் என்று நம்புகிறேன்.

கவிதா | Kavitha said...

பாலா மிகவும் வருத்தமடைய செய்தி.. ஆழ்ந்த அனுதாபங்கள் !!

Unknown said...

எல்லோருக்கும் இறப்பு உண்டு. ஆனாலும் இது போன்ற நெருங்கிய உறவுகளின் அகால மரணம் எளிதில் ஆற்ற முடியாததுதான். உங்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் அதைத் தாங்கிக் கொள்ளும் மனோ வலிமையை இறைவன் அருளட்டும்.

நா. கணேசன் said...

very sorry to hear this.

N. Ganesan

நிகழ்காலத்தில்... said...

இந்த இழப்பிலிருந்து நீங்களும், உங்கள் தமக்கை குடும்பத்தாரும் மீண்டு வர எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நிகழ்காலத்தில்... said...

இந்த இழப்பிலிருந்து நீங்களும், உங்கள் தமக்கை குடும்பத்தாரும் மீண்டு வர எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

RV said...

ஆழ்ந்த அனுதாபங்கள். மிக வருத்தம் அடைய வைக்கும் செய்தி. இந்த துயரத்தை தாங்கும் சக்தியை உங்களுக்கு கடவுள் தர பிரார்த்திக்கிறேன்.

said...

Sorry to hear that. May LORD give you and your sister's family enough courage to come out of this.

சத்யராஜ்குமார் said...

/அகாலத்தில் ஒருவர் இறப்பது என்பது அவருக்கான தண்டனையே அல்ல. அந்த தண்டனை அவரைச் சார்ந்தவர்களுக்கானது./

வலியில் பிறந்த நிதர்சனமான வார்த்தைகள். எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

RAJI MUTHUKRISHNAN said...

Deepest condolences. May God give you, and your family, the strength to bear this terrible loss.

said...

பாலா!
வலி உணரமுடிகிறது. தேறிடுங்கள். சகோதரி குடும்பத்தினரைத் தேற்றிடுங்கள்.

வழிப்போக்கன் said...

முகம் தெரியாத பாலா நீங்கள். உங்கள் எழுத்தைத் தெரிந்தவன் நான்.
உங்கள் சோகம் என்னையும் கப்பிக்கொண்டுள்ளது.
உங்கள் ஆனந்தன் தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்திருப்பான் என்பது நிச்சயம்.
சோகம் காலவேகத்தில்தான் கரையும் என்பார்கள். காலம் அதைக் கரைக்கும் வரையில் நண்பர்களாகிய முகம் தெரியாத பலர் உங்கள் சோகத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு ஓரளவேனும் ஆறுதல் தரும் என்று கருதும்
கிருஷ்ணமூர்த்தி

துளசி கோபால் said...

ரொம்ப வருத்தமா இருக்கு பாலா.

எப்படி ஆறுதல் சொல்ல முடியுமுன்னே புரியலை.

இழப்பின் வலி தாங்க மனசைக் கல் ஆக்கிக்கணும்.

ஆனந்தின் ஆத்மாவுக்கு சாந்தியும், உங்களுக்கு மனவலிமையும் கிடைக்கணுமுன்னு பிரார்த்திக்கிறேன்.

என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.

enRenRum-anbudan.BALA said...

என் துக்கத்தைப் பகிர்ந்து, பின்னூட்டம்/மெயில் வழி ஆறுதல் அளித்த அனைவருக்கும் நன்றி.

இத்தனை நலம் விரும்பிகள், முகமறிந்த/முகமறியா நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பே தெம்பளிப்பதாக உள்ளது.

மீண்டும் நன்றி.

எ.அ.பாலா

-L-L-D-a-s-u said...

பாலா ,

மிக வருத்தமடைய வைக்கும் செய்தி!

ஆழ்ந்த அனுதாபங்கள் .

மனதை தேற்றிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை ;(

பிச்சைப்பாத்திரம் said...

பாலா,

இப்போதுதான் படித்தேன். வருத்தமான செய்தி. ஆழந்த அனுதாபங்கள். இளமையில் ஏற்படும் மரணம் இன்னும் அதிக வலியை ஏற்படுத்தக்கூடியது. சீக்கிரம் வெளியே வாருங்கள்.

பிச்சைப்பாத்திரம் said...

சொல்ல விட்டுப்போனது:

சோகமான செய்தியை பகிர்ந்து கொள்ளும் இடைவேளையிலும் அந்த மரணத்திற்கு காரணமான கவனக்குறைவை சுட்டிக்காட்டி அதன் மூலம் மற்றவர்களையும் எச்சரிக்கை செய்தது நெகிழ்வை ஏற்படுத்தியது.

ஸ்ரீ.... said...

ஆழ்ந்த அனுதாபங்கள். இழப்புக்கிடையிலும் தாங்கள் சமூக அக்கறையோடு தந்திருக்கும் பதிவுக்கு மிகவும் நன்றி. வருங்காலம் நிச்சயம் உங்களுக்கு மகிழ்வைத் தரும்வகையில் அமையும்.

ஸ்ரீ....

said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

இது போன்ற துயரங்களைப் படைத்தவன் அவைகளை தாங்கும் இதயத்தைத்தான் நமக்குப் படைக்கவில்ல்.

காலம் உங்களை ஆறுதல் படுத்ட்டும்.

sowri said...

words can't fill here. Sometimes we have no answers to simple question. I encore your views.My deep condolence.

வாழவந்தான் said...

ஆனந்தின் ஆன்மா சாந்தியடையவும், நீங்களும் உங்கள் சுற்றமும் இந்த சோகத்திலிருந்து வெளிவர மனவலிமை பெறவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

ஒரு காசு said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

முத்துகுமரன் said...

வார்த்தைகளின்றி கண்ணீரோடு உங்களுடன்

enRenRum-anbudan.BALA said...

கனத்த மனதோடு ஒரு அனானிமஸ் "வசவு" பின்னூட்டத்தை நிராகரிக்க வேண்டியிருந்தது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுபவரை என்ன செய்ய முடியும் :-(

ஆனால், என் துக்கத்தை பகிர்ந்து கொள்ள / ஆறுதல் சொல்ல இத்தனை அருமையான நண்பர்கள் இருக்கையில், அந்த அனானியின் பின்னூட்டம் பற்றி அதிகம் வேதனையில்லை !

நன்றி !

எ.அ.பாலா

லக்கிலுக் said...

காலத்தோடு காலமாக இணைந்தவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

அன்னார் தங்கள் குடும்பத்தினரின் நினைவுகளில் என்றும் சிரஞ்சீவியாக வாழுவார்.

enRenRum-anbudan.BALA said...

ஸ்ரீ, ராம், சௌரி, வாழவந்தான், காசு,

ஆறுதலுக்கு நன்றி.

enRenRum-anbudan.BALA said...

எல்.எல்.தாஸு, சுரேஷ் கண்ணன், முத்துகுமரன், லக்கிலுக்,

ஆறுதலுக்கு நன்றி.

dondu(#11168674346665545885) said...

என் மனதை இச்செய்தி மிகவும் துக்கப்பட செய்தது. அதுவும் ப்ருசிங் செண்டரிலிருந்து கிளம்பப் போகும் நொடியில்தான் அதைப் பார்த்தேன். அப்போது லாக் அவுட் செய்திருந்தேன். கிளம்ப வேண்டிய அவசரம் வேறு. ஆகவேதான் உங்களுக்கு ஃபோன் செய்து எனது துக்கத்தை வெளிப்படுத்தினேன்.

தாங்க முடியாத இழப்பு. உங்கள் சகோதரிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vijay said...

ஆழ்ந்த அனுதாபங்கள் சார்.

படிக்கவே முடியலை. மனசைப் போட்டு ஏதோ பிசைவது போல் இருக்கிறது. எனது கசின் சிஸ்டரும் இம்மாதிரி இரு வருடங்களுக்கு முன் ஆள்வார்பேட்டை பாலத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு இறந்திருக்கிறாள்.

பாலத்தைக் கட்டுபவர்கள் உருப்படியான தடுப்புச் சுவர் ஏன் கட்டுவதில்லை. பாலங்களின் தடுப்புசுவர் அளவுக்கு ஏதும் விதிமுறை இல்லையா??? டிராஃபிக் ராமசாமியிடம் தான் கேட்கணும்.

இந்த மீளாச் சோகத்திலிருந்து மீண்டு வர, இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

/விஜய்

உயிரோடை said...

ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா

anujanya said...

பாலா,

இன்று தான் பார்த்தேன். எவ்வளவு சோகம்! பிறருக்கு நடக்கும் வரை மட்டுமே அவை செய்தி என்ற கொடூர உண்மையை சில வருடங்கள் முன் நண்பனை இழந்தபோது அறிந்து கொண்டேன்.

எங்கள் அனுதாபங்களும். But time is a great healer Bala and pray God that you and your family come out of this asap.

அனுஜன்யா

enRenRum-anbudan.BALA said...

Dondu Sir, Kasi, Vijay, Minnal, Athiyaman, Anujanya,

ஆறுதலுக்கு நன்றி.

சீமாச்சு.. said...

பாலா,
இப்பத்தான் இதைப் படிச்சேன். இழப்பு ரொம்ப சோகம். அதுவும் 27 வயதென்பது “வளர்த்துக் கொடுப்பது” போன்றது. மாமா-மருமகன் நெருக்கம் என்பதே தனி.. மருமகன் என்ன பண்ணினாலும் மாமாவின் ஆதரவு நிச்சயம் உண்டு..

இழப்பின் வலி கொடியது. உங்கள் அக்காவுக்கும் அத்திம்பேருக்கும் ஆதரவு சொல்லுங்கள்.. புத்திரசோகம் ரொம்ப கொடியது..

இதிலிருந்து உங்கள் குடும்பம் மீண்டு வர என் பிரார்த்தனைகள் !!

அன்புடன்
சீமாச்சு

அபி அப்பா said...

ஆண்டவா! இப்போது தான் இந்த பதிவை கவனித்தேன். இப்போதைக்கு தேவை உங்களுக்கு மனதைரியம் தான். ஆனந்து அவர்கள் ஆத்மா அமைதி பெறட்டும் ஆண்டவன் காலடியில்:-((

said...

உங்களது இழப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்

ராம்கி

enRenRum-anbudan.BALA said...

சீமாச்சு, அபி அப்பா, ராம்கி,

நன்றி.

R.Gopi said...

பாலா

நீண்ட நாள் இடைவெளியில் இப்போதுதான் இங்கே வந்தேன்..... அந்த கல்வி உதவிக்கான மெயில் படித்து விட்டு, கமென்ட் போட்டு விட்டு, கீழ் வந்து இதை படித்தேன்.....

மிகவும் வருத்தமாக இருக்கிறது.......

சிறு வயதிலேயே அவரை பிரிந்த தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்......

துயரத்திலிருந்து சீக்கிரம் விடுபடுங்கள் என்று சொல்லும்போதே, அதை ஞாபகப்படுத்துகிறோமோ என்ற உணர்வும் ஏற்படுகிறது......

இந்த சோகத்திலிருந்து நீங்கள் அனைவரும் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்....

அன்பு said...

மிகுந்த வருத்தமாயிருக்கிறது பாலா. ஆனந்தை இழந்து தவிக்கும் உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த் அனுதாபங்கள். என்னதான் ஆறுதல் சொன்னாலும், அது வாய் வார்த்தைதான் என்றாலும், இந்தப் பெரிய இழப்பில் இருந்து மீள இறைவனை இறைஞ்சுகிறேன்.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails